16 ஏப்ரல் 2009
3வது முறையாக மாரடைப்பு - மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதி
இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தியவர்களில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் மணிரத்னம், இப்போது ராவண் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் - அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வரும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனிடம் தொடர்பு கொண்டோம்.
மணிரத்னம் இப்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் நிகில் தெரிவித்தார்.
3வது முறை..
மணிரத்னத்துக்கு இதற்கு முன்பு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆய்த எழுத்து படப்பிடிப்பின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ஓய்வு எடுத்து வந்த மணிரத்னம், சற்று இடைவெளி கொடுத்து குரு படத்தைத் தொடங்கினார்.
குரு படத்தின் ஷூட்டிங்குக்காக கொல்கத்தா சென்றிருந்தபோது அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்தது.
இந்த நிலையில் இப்போது ராவண் படத்தை இயக்கும் போது மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இச்செய்தி மணிரத்னம் மற்றும் சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மணிரத்னம் நலம்பெற்று வந்து நல்ல சினிமாக்கள் தர பிரார்த்திப்போம்!